ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்:எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது என்ற சரித்திரத்தை த.மா.கா. எழுதும்;விடியல் சேகர்-யுவராஜா கூட்டாக பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது என்ற புதிய சரித்திரத்தை த.மா.கா. எழுதும் என்று ஈரோட்டில் பேட்டி அளித்த கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் கூறினார்கள்.

Update: 2023-01-19 21:26 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது என்ற புதிய சரித்திரத்தை த.மா.கா. எழுதும் என்று ஈரோட்டில் பேட்டி அளித்த கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் கூறினார்கள்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்து உள்ளன. ஏற்கனவே அ.தி.மு.க. தேர்தல் பணிகளை முடுக்கி விட்ட நிலையில், கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டம் ஈரோடு வில்லரசம்பட்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சி.எஸ்.கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டாக பேட்டி

கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள். தொடர்ந்து 2 பேரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். எதிர்பாராதவிதமாக தொகுதி எம்.எல்.ஏ. மறைந்ததால், இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள த.மா.கா. தயாராக இருக்கிறது.

த.மா.கா.வுக்கு ஒதுக்க வேண்டும்

ஏற்கனவே கிழக்கு தொகுதியில் நாம் போட்டியிட்டு இருப்பதால், இடைத்தேர்தலிலும் த.மா.கா.வுக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கிறோம். எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடமும் இந்த தொகுதியை கேட்டு பெறுவதற்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். கூட்டணி தலைவர்கள் ஆலோசனை செய்து கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடுவது? யார் வேட்பாளர்? என்று அறிவிப்பார்கள்.

புதிய சரித்திரம்

கடந்த தேர்தலின் போதே நாங்கள் கடுமையாக உழைத்தோம். இப்போது தி.மு.க. மக்களுக்கு எதிராக இருப்பதால், எங்களால் இன்னும் எளிதாக மக்களின் நம்பிக்கையை பெற முடியும். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் எந்த வேட்பாளர் நின்றாலும் வெற்றி பெறுவார். தமிழகத்தின் இடைத்தேர்தல் வரலாற்றில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது என்ற புதிய சரித்திரத்தை த.மா.கா. எழுதும்.

இந்த தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் நாங்கள் கடுமையாக உழைப்போம். அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவதா? த.மா.கா. சின்னத்தில் போட்டியிடுவதா?, சைக்கிள் சின்னத்தை கேட்டு பெறுவதா? என்பது பற்றி எங்கள் தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க., த.மா.கா. கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்