ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - பறக்கும்படை, கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க உத்தரவு

வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-19 19:11 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வாக்களித்ததை உறுதி செய்யும் விவி பேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும்படை மற்றும் 3 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதிகபட்சம் ரூ.50,000 மட்டுமே கையில் ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும் என்றும் சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்