ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கல்யாண உற்சவம்

Update: 2022-11-01 05:00 GMT

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி விழா

ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால் மூலம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் முருகன் தாரகாசூரனையும், சிங்கமுகாசூரனையும் அதன்பின்னர் சூரபத்மனையும் வதம் செய்தார்.

திருக்கல்யாணம்

கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவ பூஜைகள் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வேலாயுதசாயின் உற்சவ சிலைகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதையடுத்து வேலாயுதசாமிக்கும் வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். திருமணமான பெண்களுக்கு புதிய மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பகல் 12.10 மணிக்கு கல்யாண விருந்தாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிரிவலம்

இதில் பக்தர்கள் அன்னதான விருந்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொண்டனர். மாலையில் வள்ளி-தெய்வானை சமேத முருகனின் கிரிவலம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது மேளதாளம் முழங்க முருகனின் திருவீதி உலா நடந்தது.

இதேபோல் ஈரோடு ஈஸ்வரன் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில், கோட்டை முத்துகுமாரசாமி கோவில், ரெயில்வே காலனி சுப்பிரமணியசாமி கோவில், முனிசிபல்காலனி பாலமுருகன் கோவில், சென்னிமலை ரோடு மலேசியா முருகன் கோவில் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

----------------

Tags:    

மேலும் செய்திகள்