ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டில் அடிபம்புடன் சேர்த்து தார் ரோடு அமைத்ததால் பரபரப்பு

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டில் அடிபம்புடன் சேர்த்து தார் ரோடு அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-09 00:11 GMT

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டில் அடிபம்புடன் சேர்த்து தார் ரோடு அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிபம்பு

ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்டது நேதாஜி வீதி. இங்கு மக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அடிபம்பு பொருத்தப்பட்டது. இதனை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி தண்ணீர் வசதி பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நிலத்தடி குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அந்த அடிபம்பை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இதற்கிடையில் வெண்டிபாளையம் புதிய பாலத்தில் சீரமைப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் நேதாஜி வீதி வழியாக மோளகவுண்டன் பாளையத்துக்கு சென்று வருகின்றன.

தார்ரோடு அமைப்பு

இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் நேதாஜி வீதியில் தார்ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. அப்போது ஆழ்துளை கிணறு அடிபம்புடன் சேர்த்து மாநகராட்சி ஒப்பந்ததாரர் தார்ரோடு அமைத்து சென்றுள்ளார். அடிபம்புடன் சேர்த்து தார் ரோடு அமைத்திருப்பது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உடனடியாக இதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்தனர்.

மேலும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ள நிலையில் ஈரோட்டிலும் அடிபம்புடன் சேர்ந்து தார் ரோடு அமைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அடிபம்புடன் தார்ரோடு அமைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று அடிபம்பை வெட்டி அகற்றினார்கள். அடிபம்புடன் சேர்ந்து தார்ரோடு அமைக்கப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்