பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் இன்று தனித்தனியாக சந்திப்பு..!

மதுரை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

Update: 2022-11-11 09:06 GMT

சென்னை,

திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.

விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று மதியம் 3.00 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்