கிராமங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை

கிராமங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

Update: 2023-05-02 19:15 GMT

கிராமங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

நம்ம ஊரு சூப்பரு திட்டம்

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நம்ம ஊரு சூப்பர் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தூய்மையான சுற்றுச்சூழல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.

கிராமங்களில் தூய்மையான சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களை தூய்மையான பகுதியாக மாற்ற வேண்டும். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த நோக்கத்துடன் 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

இந்த ஊர்வலம் ஊராட்சியில் பல்வேறு வீதிகள் வழியாக சென்றது. இதையொட்டி சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் எனும் உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவி பிரியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்