ராயக்கோட்டை
கெலமங்கலம், காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வீடு, வீடாக நடைபெற்றது.
கணக்கெடுக்கும் பணி
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் கெலமங்கலம் ஒன்றியத்தில் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடை பெற்று வருகிறது. அதன்படி கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் பள்ளிக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு, ஆசிரியர் பயிற்றுனர்கள் வேடியப்பன், நாராயணன், பெட்டமுகிலாளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து செல்போன் செயலி மூலம் குழந்தைகளின் புகைப்படம் பதிவேற்றம் செய்தும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், வீட்டு பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும், தேவையான உபகரணங்களை பெற்று தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பெற்றோரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதன்படி நடுப்பையூர், இடைப்பையூர், இடைப்பையூர் காலனி, எர்ரஅள்ளி மற்றும் காத்தான் கொட்டாய் பகுதிகளில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நடுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யாராப் அலி ஆகியோர் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளி செல்லா மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் தெரிவித்தனர். மேலும் அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினர். அப்போது ஆசிரியர் சக்திவேல் ஆசிரியர் பயிற்றுனர்கள், காவேரி, கோவிந்தராசு, நவநீதன், சுகந்தி, சிறப்பாசிரியர்கள் பிரகாஷ், முத்துச்செல்வி, கலைச்செல்வி ஆகியோர் உடன் சென்றனர்.