நுழைவு வரி வசூலிக்கும் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
கூடலூர், பந்தலூரில் நுழைவு வரி வசூலிக்கும் ஊழியர்கள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் மையங்களை மூடி விட்டு சென்றதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர், பந்தலூரில் நுழைவு வரி வசூலிக்கும் ஊழியர்கள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் மையங்களை மூடி விட்டு சென்றதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
திடீர் வேலைநிறுத்தம்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் மாநில எல்லைகளில் உள்ள பாட்டவயல், தாளூர், நம்பியார்குன்னு, நாடுகாணி, சோலாடி உள்ளிட்ட இடங்களில் நுழைவு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நுழைவு வரி வசூலில் ஈடுபடும் ஊழியர்கள், அதற்கான ரசீது வழங்குவதில்லை என சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை கண்டித்து நுழைவு வரி வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் நேற்று காலை 11 மணிக்கு திடீரென நுழைவு வரி வசூல் செய்யும் பணியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாட்டவயல், சோலாடி, நாடுகாணி உள்பட அனைத்து நுழைவு வரி வசூல் மையங்களை பூட்டு போட்டு விட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து கூடலூர், பந்தலூர் வரும் வாகனங்களில் நுழைவு வரி வசூலிக்கப்படவில்லை.
வருவாய் இழப்பு
இதனால் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லைக்குள் வரி இன்றி இயக்கப்பட்டது. இதுகுறித்து நுழைவு வரி வசூலிக்கும் ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, வாகன வரத்து அதிகமாக உள்ள சமயத்தில் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒருவர் நுழைவு கட்டணத்தை வசூல் செய்வதும், மற்றொருவர் ரசீது வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். இதை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர். ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தால் மாநில எல்லைகளில் நுழைவு வரி வசூலிக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.