நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து சாலையில் உலா வந்த கரடி
விக்கிரமசிங்கபுரம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து சாலையில் உலா வந்த கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து சாலையில் உலா வந்த கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
வனவிலங்குகள்
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரடி புகுந்து சாலையில் உலா வந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.
சாலையில் வீறுநடை போட்ட கரடி
அதில், நள்ளிரவு 12 மணியளவில் சிவந்திபுரம் ஊருக்குள் இருந்து பஸ் நிறுத்தம் நோக்கி மெயின் ரோட்டில் கரடி கம்பீரமாக நடந்து செல்வதும், பின்னர் மெயின் ரோட்டில் இருந்து மேற்கு பக்கமாக திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
மேலும் சாலையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களின் வெளிச்சத்தைப் பார்த்ததும் கரடி சாலையோரம் பதுங்குவதும், பின்னர் வாகனங்கள் சென்றதும் மீண்டும் சாலையில் வீறுநடை போட்டு செல்வதும், அதனைக் கண்ட நாய்கள், மாடுகள் போன்றவை மிரண்டு ஓடிய காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் ஊருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.