வீடுபுகுந்து ரூ.3 ஆயிரம் திருடிய வாலிபர் தப்பிஓட்டம்
ஆறுமுகநேரியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து ரூ.3 ஆயிரம் திருடிய வாலிபர் தப்பிஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்துளை குரூஸ் நகர் பகுதியை சேர்ந்த செல்லையா மகன் செல்வம். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் செல்வத்தின் அக்காள் கணவர் ஆத்தூர் அருகே உள்ள கொழுவைநல்லூரில் இறந்து விட்டதால் குடும்பத்தோடு அங்கு சென்று விட்டார். அங்கிருந்து நேற்று காலை 11 மணியளவில்அவர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டை திறந்து போது, உள்ளே 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளார். செல்வம் கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தில் திரண்டு துரத்தியுள்ளனர். ஆனால் மர்ம வாலிபர் வேகமாக ஓடி தப்பிவிட்டார்.
பதற்றத்துடன் வீட்டிற்குள் செல்வம் சென்றபோது, சமையலறையில் மேலே உள்ள ஓடுகளை கழட்டி அதன் வழியாக விட்டுக்குள் இறங்கி, பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.3 ஆயிரத்தை மர்ம வாலிபர் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.