வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
புதுப்பேட்டை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்றதோடு, மேலும் 3 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி சாந்தா (வயது 75). கணவர் இறந்து விட்டதால் இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாந்தா வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டின் உள்பக்க தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த சாந்தா கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தா திருடன், திருடன் என கூச்சலிட்டார்.
நகை, பணம் இல்லாததால் ஏமாற்றம்
உஷரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதோடு, பக்கத்து தெருக்களை சேர்ந்த ஜோதி, குமார், துரை ஆகியோரது வீடுகளிலும் பின்பக்கம் மற்றும் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மற்ற வீடுகளில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து சாந்தா மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணை
மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் கூப்பர் நகை பறிப்பு சம்பவம் நடந்த வீட்டில் இருந்து பனப்பாக்கம் ரெயில்வே கேட் பகுதி வரை மோப்பம் பிடித்தபடி ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்ததோடு, அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.