மாணவர்கள் விடுபடாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யுங்கள்

மாணவர்கள் விடுபடாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யுங்கள் என்று திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

Update: 2023-07-06 19:45 GMT

ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கதிரேசன், வேளாங்கண்ணி உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் விடுபடாமல்...

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பேசுகையில், மாணவ-மாணவிகளுக்கு வாசித்தல், எழுதுதல் குறித்து நன்றாக பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து நேரில் அழைத்து பேச வேண்டும். அனைத்து மாணவ-மாணவிகளும் விடுபடாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், உடனடி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அடுத்து தேர்வு எழுத வைக்க வேண்டும்.

மேலும் பள்ளிகளுக்கு அருகே குட்கா, போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகையை நேரடியாக பெறும் வகையில் வங்கி கணக்கு, தபால் அலுவலக கணக்கு தொடங்கஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் இலக்கிய மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவ-மாணவிகளை ஈடுபாட்டுடன் செயல்பட வைக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்