கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் மின் இணைப்புகளின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த வேண்டும் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள மின் இணைப்புகளின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை மாதிரி பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி செயல்பாடுகளின் கண்காணிப்பு அலுவலரும், மதுரை மாவட்ட சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனருமான பொன்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா முன்னிலை வகித்தார்.
தூய்மையான குடிநீர்
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பொன்.குமார் பேசுகையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள், அலுவலகங்கள், குடிநீர்தொட்டிகள், கழிவறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை தகுந்த பணியாளர்களைக் கொண்டு உடனடியாக தூய்மைப் பணிகள் முடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்புகள் பாதுகாப்பான முறையில் இயங்குவதையும் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
பாடப்புத்தகங்கள், எழுதுவதற்கான நோட்டுபுத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பி, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜு, துரைராஜ், ராமச்சந்திரன், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பழனியாபிள்ளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.