அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்
ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவர் அறிவுறுத்தினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
ஆற்காடு ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-
காஞ்சனா சேகர்:- நான் பலமுறை ஒன்றியக் குழு கூட்டத்தில் எழுத்து மூலமாக ஒன்றிய பொது நிதி எவ்வளவு உள்ளது என்று கேட்டும் இதுவரையிலும் பதில் இல்லை. ஆகவே ஒன்றிய பொது நிதி கணக்கினை ஒப்படைக்க வேண்டும். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தின் வாயிலாக தெரியப்படுத்தும் குறைகளை பதிவு செய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கை
கெஜபதி:- ஒன்றியத்தில் நிதிநிலை எவ்வளவு உள்ளது என்றால் தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்கும் பொழுது அடுத்த கூட்டத்திலிருந்து சரி செய்யப்படும் என்கின்றீர்கள். ஆனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை.
சரண்ராஜ்;- முப்பது வெட்டி பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்.
ஒன்றிய குழு தலைவர்:- பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முயற்சி செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.