அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகள்
கோவை மாவட்டத்தில் கோவை, எஸ்.எஸ்.குளம், பேரூர், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 781 அரசு தொடக்க பள்ளிகள், 232 நடுநிலைப்பள்ளிகள், 83 உயர்நிலைப்பள்ளிகள், 116 மேல்நிலைப்பள்ளிகள் என்று மொத்தம் 1,212 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர கோவை மாநகராட்சியில் மொத்தம் 82 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து முடித்து உள்ளனர்.
மாணவர் சேர்க்கை தொடக்கம்
பொதுவாக அரசு பள்ளிகளில் ஜூன் மாதத்தில்தான் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த கல்வி ஆண்டில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கான பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் ஆர்வம்
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தனியாருக்கு இணையாக பல்வேறு வசதிகள் உள்ளன. அத்துடன் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் 2 பிரசார வாகனங்கள் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் இந்த கல்வி ஆண்டில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. கிராமப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.