ஆங்கில புத்தாண்டு: கோவில்களில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-01 20:51 GMT


ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால், மாநகர், புறநகரில் நள்ளிரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் புத்தாண்டு பண்டிகைக்காக கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், மதுரையில் இம்மையில் நன்மைதருவார் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், மதனகோபாலசுவாமி ேகாவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், ஒத்தக்கடை யோகநரசிம்மர் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் அவர்கள் புத்தாடை அணிந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுபோல் நகர் பகுதிகளில் அனைத்து கோவில்களிலும் அதிக அளவில் பக்தர்கள், புத்தாடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று கருவறையில் முருகப்பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதே போல கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள், சத்தியகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணியிலிருந்து பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்குள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி வேளாளர் தெருவில் 111 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமி, நீளா சமேத வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்ைட முன்னிட்டு கோவிலின் கருவறையில் பூமி, நீளா வெங்கடேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் தாயார் மற்றும் சுவாமிக்கு சந்தனம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரியில் கோட்டை வராகி அம்மன் பிரியாவிடை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அழகர்கோவில்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதில் திருநிலை கதவுகள் முழுவதும் மல்லிகை, ரோஜா, சம்மங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, முல்லை, உள்ளிட்ட 9 வகையான மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அழகர்மலையில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலை மலை முருகன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்