டிராவல்ஸ் பஸ் மோதி என்ஜினீயர் பலி
சிதம்பரத்தில் டிராவல்ஸ் பஸ் மோதி என்ஜினீயர் பலியானார்.
சிதம்பரம்:
சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மகன் ராகுல்குமார்(வயது 32). என்ஜினீயரான இவர், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் ஒரு கடையில் அவர் கண்காணிப்பு கேமரா பொருத்தினார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டார். மேலவீதி பெரியார் சிலை அருகே சென்றபோது, மேல விதி வழியாக வந்த டிராவல்ஸ் பஸ் ராகுல்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல்குமார் படுகாயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராகுல்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.