விபத்தில் என்ஜினீயர் பலி; தாயாருக்கு ரூ.25¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவத்தில் தாயாருக்கு ரூ.25¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விபத்தில் பலி
திருச்சி வயலூர்சாலை தெற்கு விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களின் மகன் ராஜீவன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரான இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி சித்தன்னவாசலுக்கு நண்பர்களுடன் சென்று சுற்றிப்பார்த்து விட்டு காரில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.அந்த கார் கீரனூர் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த ராஜீவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயகாந்தன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ராஜீவனின் தாயார், தனது மகனின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.25¾ லட்சம் இழப்பீடு
மகனை இழந்த ஸ்ரீதேவிக்கு ரூ.18 லட்சத்து 79 ஆயிரத்து 400 வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அரசு போக்குவரத்து கழகம் ஸ்ரீதேவிக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனால் அவருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சத்து 89 ஆயிரத்து 403 வழங்க வேண்டி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாவட்ட கோர்ட்டில் ஸ்ரீதேவி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி நந்தினி, பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவிக்கு உரிய இழப்பீடு வழங்காததால், அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை கோர்ட்டு அமீனா ராஜசேகர் தலைமையில் ஸ்ரீதேவி, அவருடைய வக்கீல் முத்துமாரி ஆகியோர் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு திருச்செந்தூர் செல்ல தயாராக இருந்த அரசு குளிர்சாதன பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.