கோவில் குளத்தில் இறந்து கிடந்த என்ஜினீயர்
கடலூர் முதுநகர் கோவில் குளத்தில் என்ஜினீயர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
காணாமல் போன என்ஜினீயர்
கடலூர் முதுநகர் வெங்கட்ரங்கன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் கலைமணி (வயது 21), என்ஜினீயர். கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கலைமணி, அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிய பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமணியை தேடி வந்தனர்.
கோவில் குளத்தில் பிணம்
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில், குமரன் கோவில் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரசாமி கோவில் பின்புறம் உள்ள குளத்தில் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோவில் குளத்தில் மிதந்த உடலை கைப்பற்றி, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குளத்தில் இறந்து கிடந்தது, காணாமல் போன கலைமணி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைமணி கோவில் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கோவில் குளத்தில் தூக்கி வீசப்பட்டாரா?, இல்லையெனில் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் குளத்தில் என்ஜினீயர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.