குற்றச்செயலில் ஈடுபடும்போலீசார் மீதும் சட்டப்படி நடவடிக்கை : போலீஸ் சூப்பிரண்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபடும் போலீசார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபடும் போலீசார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையினருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, போலீசார் பொதுமக்களிடம் அன்பாகவும், கனிவாகவும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதே நேரத்தில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித தயக்கமுமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது நமது கடமை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் மீது நடவடிக்கை
அது போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுக்கு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கபட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.
குற்ற செயலில் ஈடுபடும் இளஞ்சிறார்களை சட்டவிதிகளுக்குட்பட்டு கையகப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து போலீசாரின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், போக்சோ சட்டங்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஈரோடு மாவட்ட மனநல டாக்டர் அசோக், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், விளாத்திகுளம் ஆகிய உட்கோட்டங்களை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.