அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 15:23 GMT

சென்னை,

இன்று மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர் .

5 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகளினால் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது.இதுபோன்ற விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை ஒடுக்கி விடலாம் என மோடி அரசு நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்