உயிருக்கு பகையாகும்புகைப்பழக்கம் -டாக்டர்கள்,பொதுமக்கள் கருத்து

புகைப்பழக்கம் உயிருக்கு பகையாகும் என டாக்டர்கள்,பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-02-03 17:42 GMT

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

அதிகரிப்பு

தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

விழிப்புணர்வு வேண்டும்

சென்னையை சேர்ந்த இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயகுமார் கூறும்போது, 'இதயத்தில் ஏற்படும் பல நோய்களுக்கு புகைபிடிப்பது மிக முக்கிய காரணமாக அமைகிறது. இப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தநாளங்களில் கொழுப்பு அதிகம் படிகிறது. அதேபோல் புகைபிடிப்பவர்களுக்கு ரத்தக் கட்டிகள் உருவாகி இதயத்துக்கு சீரான ரத்த ஓட்டத்தையும் தடுக்கிறது. சிகிச்சைக்கு வரும் இதய நோயாளிகளின் ரத்த நாளங்களில், புகைபிடிப்பதால் ஏற்படும் அடைப்பு காணப்படுகிறது. எனவே அதிகளவில் புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

ஞாபகமறதி நோய் வரும்

நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் கூறும்போது, 'இளைய சமுதாயத்தினர் இடையே புகைபிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவுவது கவலை அளிக்கிறது. நரம்பியல் ரீதியாக பார்த்தால், புகைப்பிடிப்பதால் வாதநோய் வர 4 சதவீத வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஞாபகமறதி உள்ளிட்ட நரம்பியல் நோய்களுக்கும் புகைப்பழக்கம் வித்திடுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்களில் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, 'கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்' என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, நம்மையும் மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

காசநோயை உருவாக்கும்

திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர்.செந்தில்:- புகையிலையை மனிதர்கள் பலவிதமாக பயன்படுத்துகிறார்கள். பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றை பற்ற வைத்து புகையை உள்ளே இழுத்து சுவைப்பது ஒரு ரகம். நேரடியாக வாய் வழியாக மென்று சுவைப்பது மற்றொரு ரகம். ஒரு சில பழமைவாதிகள் வெற்றிலை, பாக்குடன் புகையிலையை வைத்து பயன்படுத்துகிறார்கள். எந்த வகையில் பயன்படுத்தினாலும் அதற்கான பாதிப்பு ஏற்படும். பீடி, சிகரெட் புகைப்பதால் அவர்களை மட்டும் பாதிக்காமல் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து பாதிக்கிறது. மென்று சுவைப்பது நேரடியாக ரத்தத்தில் கலக்கக் கூடியது. இன்னும் அதிகமாக பாதிக்க கூடியதாக இருக்கும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 960 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 150 பேர் புகை பிடிப்பதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25 குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அருகில் உள்ளவர்கள் புகை பிடிப்பததால் இருக்கலாம். புகை பிடித்தல் தன்னை மட்டும் இல்லாமல் நம்ம சுற்றி இருக்கிற குடும்பத்தினரையும் பாதிக்கிறது. அதனால் புகை பிடிப்பதை தவிர்த்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

ஆரணியை சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.அமர் நீதி கணேசன்:- சிகரெட்டை பற்ற வைத்து உள்ளே இழுக்கும்போது சுமார் 7,000 ரசாயனங்கள் நம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது, இது புற்றுநோய்க்கான காரணிகளாக உள்ளது. சிகரெட் பிடிப்பதால் புற்று நோய், சிறுநீரக பை, குடல், உணவுக் குழாய், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிக்கோடின் எனப்படும் ரசாயனம் மனிதனை அடிமைப்படுத்துவது, பதற்றம், மனசோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். கண் புரை, பார்வை கோளாறு போன்றவைகள் ஏற்படலாம். மேலும் சுவாச நோய்கள், நுரையீரல் பாதிப்பு ஏற்படுத்தும். நம்மை மட்டும் பாதிக்காமல் சுற்றியுள்ள சிறு குழந்தைகள், சக மனிதர்களுக்கும் இப்பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே புகைப்பிடித்தல் பழக்கத்தை விட்டு விட்டு நம்முடைய உடம்பில் ஆரோக்கியத்தை பேணுதல் நல்லது.

புற்று நோய்

வாலாஜா அரசு மருத்துவர் வாசுதேவன்:-புகை பிடிப்பதால் ரத்தகொதிப்பு அதிகம் ஏற்பட்டு இருதயத்தில் படபடப்பு அதிகரிக்கும். மேலும் அவர்களுக்கு மூளையில் பக்கவாதம் ஏற்படும் நிலையும் உள்ளது. தொடர்ந்து புகை பிடிப்பதால் வாய் மற்றும் நாக்கில் புண்கள் ஏற்படும். அதுவே வயிற்றில் அல்சர் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறுவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. மேலும் நுரையீரல் பாதிக்கப்பட்டு சி.ஓ.பி.டி. என்ற பாதிப்பு ஏற்படும். அதிக காலம் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டு வலி, மூட்டு தேய்மானம், எலும்பு பிரச்சினை, தோல் சுருக்கம் ஏற்பட்டு சிறுவயதினர் கூட அதிக வயது உடையவர்களாக தோற்றம் அளிக்கக் கூடும். புகை பிடிப்பவர்களுக்கு மலட்டுத்தன்மை அதிகம் ஏற்படும். இவர்கள் புகை பிடிப்பதால் அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் இது போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

காட்பாடி ஜங்காலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முரளீதர்:-புகைப்பிடித்தல் என்பது நம்முடைய உடல் நலத்துக்கு கேடு. புகை பிடிப்பவர்களை விட அவர்கள் வெளியேற்றும் புகையை அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது கடுமையாக பாதிப்படைகின்றனர். இதை புகை பிடிப்பவர்கள் உணர்வதில்லை. இளைய சமுதாயத்தினரும் தற்போது புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது வருத்தத்திற்குரியது. எனவே புகை பிடித்தலை அரசு தடை செய்ய வேண்டும். மேலும் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயுளை குறைக்கும்

திருவண்ணாமலையை சேர்ந்த கே.மதன்:- புகை பிடிப்பதினால் புற்றுநோய் உண்டாகும் என்று தியேட்டர்களில் படங்கள் போடுவதற்கு முன்பு விளம்பரம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி சிகெரட் பாக்கெட்களிலும் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலா் புகைப்பிடிப்பதை ஒரு ஸ்டைலாக நினைக்கின்றனர். பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க அரசு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். இதனை சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

வேலூரை சேர்ந்த ஆசிரியர் ஆ.அருள்சுவிகர்:- புகை பிடித்தலை ஹீரோயிசமாக பார்க்கும் மனப்பான்மை இளைஞர்கள் மத்தியில் சினிமா மூலம் விதைக்கப்பட்டுள்ளது. அவர்கள் புகை பிடித்து உடலை கெடுத்துக்கொள்வதுடன், அவர்களால் அருகில் இருப்பவர்களின் உடல்நலமும் பாதிப்படைகிறது. பெற்றோர்கள், குழந்தைகள் முன்பு புகைபிடிக்கக்கூடாது. அவர்களுக்கும், மாணவர்களுக்கும் புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

தனிமனித கட்டுப்பாடு வேண்டும்

ஆற்காடு பேராசிரியர் த.அசோகன்:- புகை பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் யோசித்தாலே போதும் தீமைகளை உடனடியாக உணரமுடியும். புகை உடலுக்கு பகை என்பதை நன்றாக அறிந்திருந்தும், இன்றைய சமுதாயம், குறிப்பாக இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது மிகவும் வருந்தத்தக்கது. புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் நிலை தொடர் இருமல், நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பாக மாறி தனது உயிருக்கு தானே உலை வைத்துக்கொள்கிறார்கள். திரைப்படங்களில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளை நிஜமென்று நம்பி, ஸ்டைல் என்ற மோகத்தில் இளைஞர்கள் சீரழிவதை உணர வேண்டும். தன்னால் மட்டுமே தன் குடும்பத்தை அழ வைக்கவும் அழிக்கவும் முடியும் என்பது இவர்களால் மட்டுமே சாத்தியம். முதலில் நீ உன்னை அறிந்துக்கொள், பிறகு உன்னை உலகம் அறியும் என்ற சுவாமி விவேகானந்தரின் ஆற்றலை பின்பற்றினாலே புகை என்னும் பகையை சிதைக்கு தள்ளமுடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. என்னதான் அரசாங்கம் கடுமையான சட்டதிட்டங்களை விதித்தாலும், தனிமனித கட்டுப்பாட்டால் மட்டுமே இதுபோன்ற தீய பழக்கங்களை ஒழிக்க முடியும்.

திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ஏ.டி.ஆர்.அருண்குமார்:- சிறுவயதில் நண்பர்கள், சிகரெட் பிடிப்பதை ஸ்டைலாக நினைத்து சிகரெட் அல்லது பீடி புகைக்க தொடங்குகின்றனர். பின்னர் அதனை கைவிட முடியாமல் அதற்கு அடிமையாகிறார்கள். தற்போது புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு சுவிங்கம் மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகள் உள்ளது. புகைபிடிப்பவர்கள் அதில் இருந்து விடுபட்டு உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்