நெற்களங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

நெற்களங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-01-04 16:33 GMT

குறை தீர்வு கூட்டம்

அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் சுதா, ராமலிங்கம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நில அளவையர் சதீஷ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்து பேசினர். அவர்கள் பேசியதாவது:-

நெற்களம் ஆக்கிரமிப்பு

அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் பயிரிடப்படும் பயிர்களை உலர வைக்க ஆங்காங்கே நூற்றுக்கும் மேற்பட்ட நெற்களங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது அந்த நெற்களங்களை ஆக்கிரமித்து கொட்டகை போட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய நெற்களங்கள் அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடன் பெற்று கறவை மாடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். அந்த கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கலைஞரின் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளில் தான் செடிகள், விதைகள் வழங்கி வருகின்றனர். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளை வழங்க வேண்டும். மேலரசம்பட்டில் காட்டெருமைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனவிலங்குகள் நிலத்திற்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல்போகும் மனுக்கள்

விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு யூரியா, அமோனியம் சல்பேட் உள்ளிட்ட உரங்களை வழங்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் சிபாரிசு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா தான் வழங்க வேண்டும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுவதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். அணைக்கட்டு தாலுகாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரும் மனுக்கள் காணாமல் போய்விடுகிறது என அலுவலக உதவியாளர்கள் கூறி வருகின்றனர். மனுக்களை உடனுக்குடன் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த தாசில்தார் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரும் மனுக்கள் காணாமல் போவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நெற்களங்கள் கண்டறிந்து சேதம் அடைந்த நெற்களங்களை சீரமைத்து தருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்