ஆக்கிரமித்து கட்டப்பட்ட 109 வீடுகள் இடிப்பு

ஆக்கிரமித்து கட்டப்பட்ட 109 வீடுகள் இடிப்பு

Update: 2022-09-09 14:24 GMT

திருப்பூர்,

திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பில் இருந்த 109 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து அவர்கள் அந்த வீடுகளுக்கு குடியேறியதும், ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் காவல்துறையுடன் இணைந்து இடித்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் நடராஜா தியேட்டர் அருகே எம்.ஜி.ஆர். நகரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருந்த 67 வீடுகளை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நெருப்பெரிச்சலில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடனுதவியும் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டது. நேற்று 63 வீடுகளை சேர்ந்தவர்கள் வீட்டை காலி செய்தனர். இதைத்தொடர்ந்து 63 வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லீன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். 4 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு வங்கிக்கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சாயப்பட்டறை வீதி

இதுபோல் திருப்பூர் சாயப்பட்டறை வீதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் 92 வீடுகள் உள்ளன. இவர்களில் 46 குடும்பத்தினருக்கு நெருப்பெரிச்சல் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் வீட்டை காலி செய்ததால் நேற்று 46 வீடுகள் இடிக்கப்பட்டன. கடன் உதவி செய்து கொடுத்த பின்பு மீதம் உள்ள வீடுகள் விரைவில் இடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்