ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-15 00:58 GMT

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டல அலுவலர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் முன்னிலையில் வாரத்தில் 3 நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் சாலைகள், பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

தாமாக முன்வந்து...

கடந்த 3 வாரத்தில் 563 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 1,366 தற்காலிக கூடாரங்கள் என மொத்தம் 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக அடையாரில் 278 ஆக்கிரமிப்புகளும், கோடம்பாக்கத்தில் 246 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுவரொட்டி ஒட்டினால் புகார்

அதேபோல் சென்னை மாநகராட்சி வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 11-ந் தேதி வரை அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பெயர் பலகைகள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 1,072 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டுதலை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்