அருள்புரம்,
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு சாலையிலிருந்து ஏ.பி.நகர், நொச்சிப்பாளையம், அல்லாளபுரம், பொல்லிகாளிபாளையம் வழியாக செல்லும் இந்த சாலை தாராபுரம் சாலையை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இந்த சாலை உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள், குடியிருப்பு உள்ளன. மேலும் தாராபுரம் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர். ஆனால் அளவு கற்களை மீறி ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள். இதனால் இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சென்று வருகிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்புகளை இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே சென்றால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்ட சென்று குறுகிய சாலையாக மாறி விடும். எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.