தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும்; ஆசிரியர்கள் மனு

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-10-17 16:01 GMT

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 679 மனுக்களை வழங்கினர்.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்பட அரசு துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பணி நியமனம் செய்ய வேண்டும்


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக் கூட்டமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சார்பில் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை நீக்கம் செய்ய வேண்டும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். பணி நியமனத்தின் போது வயதை கருத்தில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வேலை வழங்க வேண்டும்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வீடற்றோருக்கு வீடு வழங்க வேண்டும். அரசு இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். நகர்புற வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகர்புறத்திற்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் வேண்டும்

ஆரணி சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாணவனை தாக்கியதாக கூறி 4 முதுகலை ஆசிரியர்களில் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றமும், 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்கள் மீது போடப்பட்ட உத்தரவை ரத்து செய்து எங்கள் ஆசிரியர்கள், எங்கள் பள்ளியில் மீண்டும் பணி புரிய வேண்டும். இந்த ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு தகுந்த அறிவுரைகளை வழங்கி மாணவர்களை திருந்த செய்வார்களே தவிர ஒரு போதும் அடிக்க மாட்டார்கள். எனவே அந்த ஆசிரியர்களை மீண்டும் எங்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்