தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 714 பேருக்கு பணி நியமன ஆணைகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 714 பேருக்கு பணி நியமன ஆணைகள்

Update: 2022-06-11 20:17 GMT

திருவிடைமருதூர்:

கும்பகோணத்தில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 714 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் வழங்கினர்.

வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள கே.எஸ்.கே. என்ஜினீயரிங் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

முகாமுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 130-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்தனர்.

714 பேருக்கு பணி நியமன ஆணை

இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 714 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

முகாமில் 416 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கும், 64 பேர் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இ்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை. சந்திரசேகரன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சுப தமிழழகன், கோட்டாட்சியர் லதா, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மண்டல இணை இயக்குனர் சந்திரன், உதவி இயக்குனர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை சேர்ந்த ரமேஷ் குமார், ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், கே.எஸ்.கே. என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல குழு தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை(திங்கட்கிழமை) திறக்கப்படும். பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகூடம் இயங்கும் நேர மாற்றம் குறித்து தமிழக முதல்-அமைச்சருக்கு கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

61 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள்

தொடர்ந்து அமைச்சர் கணேசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இதுவரை தமிழகத்தில் 61 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 87,280 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். மாநில சர்வீஸ் கமிஷன், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ெரயில்வே தேர்வாணையம்,

வங்கி தேர்வுகள் ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்