கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அமைச்சு பணியாளர்கள்

போலீஸ் அலுவலகங்களில் அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

Update: 2023-04-19 20:30 GMT

தமிழ்நாடு போலீஸ் துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அமைச்சுப் பணியாளர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் போலீஸ் ஆணையரகம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கும் கூடுதல் அமைச்சுப் பணி இடங்கள் வழங்க உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஈட்டுப்படி வழங்க வேண்டும். போலீஸ் குடியிருப்புகளில் அமைச்சுப் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். முழு உடல் மருத்துவ பரிசோதனை திட்டத்தை அமைச்சுப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அவர்கள் அணிந்து இருந்தனர்.

அதன்படி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து வந்தனர். இதேபோல், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்களாக பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து வந்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வர திட்டமிட்டதாகவும், போலீஸ் துறை மானிய கோரிக்கையில் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்