மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
மின்கம்பத்தில் பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலியானார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரியாபட்டி,
மின்கம்பத்தில் பழுதை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலியானார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்சாரம் தாக்கி பலி
காரியாபட்டி அருகே அல்லாளப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 30). இவர் காரியாபட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஹெல்பராக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் முத்தையாவிற்கு காரியாபட்டி மின்சார வாரிய அதிகாரிகள் போன் செய்து கிழவனேரி பகுதியில் மின்சாரம் தடைபட்டு உள்ளது.
எனவே அந்தப்பகுதிக்கு சென்று சித்து மூன்றடைப்பு பகுதியில் இருந்து வரும் மின்கம்பத்தில் பீயூஸ் போட்டு வருமாறு கூறியதாக தெரிகிறது. உடனடியாக முத்தையா தனது மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதிக்கு சென்று பியூஸ் போடுவதற்கு மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
உறவினர்கள் போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாவின் உறவினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முத்தையா இறப்பிற்கான காரணத்தையும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரியாபட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் தங்கத்தமிழ்வாணன், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி ஆகியோர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இறந்த முத்தையாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் உறவினர்கள் முத்தையாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அனுமதித்தனர். இது குறித்து முத்தையாவின் தாயார் செல்வி காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.