கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் 4 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும். உழவர் சந்தைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் மொத்தமாக மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களில் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை மனு கொடுக்கச் செல்ல போலீசார் அனுமதித்தனர். அவர்கள் வரிசையாக நடந்து சென்று கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
பா.ம.க. ஆர்ப்பாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அல்லிநகரம் பனசலாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும். தேனி நகரில் ஆக்கிரமிப்பால் அழிந்துபோன நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் காஜாமைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதுபோல், தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தங்கள் கட்சியின் நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.