பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-18 21:44 GMT

நெல்லை,

பிரபல இலக்கிய பேச்சாளரும், 'தமிழ்க்கடல்' என்று அழைக்கப்பட்டவருமான நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் அவர் நேற்று மரணம் அடைந்தார்.

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களில் பேசி வந்தார்.

தமிழக அரசு விருது

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 'குறுக்குத்துறை ரகசியங்கள்' என்ற பெயரில் 2 புத்தகங்கள், கவிதை நறுக்குகள், மரபு கவிதை, புதுக்கவிதை நூல்கள் எழுதி உள்ளார். மேலும், பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 1977-ம் ஆண்டு, 1989-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்டார். 1996-ம் ஆண்டு தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து களம் கண்டு தோல்வி அடைந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் சுரேஷ் கண்ணன் என்ற சுகா சினிமா இயக்குனராகவும், 2-வது மகன் ஆறுமுகம் கண்ணன் தனியார் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் அஞ்சலி

நெல்லை கண்ணன் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரபல பேச்சாளரும், தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராஜர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன். விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்