தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக அ.ம.மு.க. உருவெடுக்கும்
தமிழகத்தில் தி.மு.க.விற்கு மாற்று சக்தியாக அ.ம.மு.க. உருவெடுக்கும் என்று தர்மபுரியில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
தமிழகத்தில் தி.மு.க.விற்கு மாற்று சக்தியாக அ.ம.மு.க. உருவெடுக்கும் என்று தர்மபுரியில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பெரியசாமி, பாஸ்கர், சாம்ராஜ், கருணாகரன், பூங்காவனம், உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தால் தான் அ.தி.மு.க.விற்கு வெற்றி கிடைக்கிறது என்பது தவறானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் காலத்திலேயே இரட்டை இலை சின்னம் பல தோல்விகளை சந்தித்துள்ளது. பர்கூரில் ஜெயலலிதாவே தோல்வியை தழுவியுள்ளார். ஜெயலலிதாவின் உருவத்தை கட்சி கொடியில் தாங்கியுள்ள அ.ம.மு.க.வின் கிளைகள் இல்லாத ஊர் இல்லை. தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. தான். தீயவர்கள் மற்றும் வியாபாரிகளின் கைகளில் சிக்கி கொண்டு அ.தி.மு.க.வும், இரட்டை இலை சின்னமும் என்ன பாடுபடுகின்றன என்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
சந்திக்க தயார்
அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கொடுக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் பரவலாக பேசி வருகிறார்கள். இது பற்றி நான் பேசியதற்காக மான நஷ்ட வழக்கு போடப்படும் என்கிறார் கே.பி.முனுசாமி. இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் கூறும் கருத்தை கேட்டு ஏன் அச்சம் அடைய வேண்டும். என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் அதை கோர்ட்டில் சந்திக்க தயார். கே.பி.முனுசாமி எப்படி இருந்தார் என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க. என்ற கட்சி இல்லாமல் போனால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க. வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அந்த கட்சிக்கு எத்தனை தலைமை என்ற பிரச்சினை நிலவுகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கு மாற்று சக்தியாக அ.ம.மு.க. உருவெடுக்கும். ஜெயலலிதாவின் கனவு மற்றும் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடியேற்று விழா
கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் ஆர்.ஆர்.முருகன், வீரபாண்டி செல்வம், பேரவை மாநில துணை தலைவர் பாலு, மாவட்ட இணை செயலாளர் கவுதமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஏகநாதன், சங்கீதா, சார்பு மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணன், பரமசிவம், கோகுல்ராஜ், வேலாயுதம், பெரியசாமி, ராமன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமேகலன் நன்றி கூறினார்.
முன்னதாக குமாரசாமிப்பேட்டை, சவுலூர் ஆகிய இடங்களில் அ.ம.மு.க. கொடியை டி.டி.வி. தினகரன் ஏற்றி வைத்தார்.