நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு அமைப்பு

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-12 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.

அரசு ஆஸ்பத்திரி

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு ஆண்கள் மற்றும் பெண் நோயாளிகளுக்கான உள் நோயாளிகள் சிகிச்சை, வெளி நோயாளிகள், மகப்பேறு சிகிச்சை, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, காசநோய், சித்த மருத்துவம் உள்ளிட்ட வார்டுகள் உள்ளன.

மேலும் ரத்த வங்கி, சலுகை கட்டணத்தில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது. கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி வெளி நோயாளிகள் பிரிவில், தினமும் 250 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், விபத்துகள் ஏற்படும் போது எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தவர்களுக்கு இங்கேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 படுக்கைகள்

ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் இருந்தது. இதனால் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை ஊட்டி அல்லது கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வந்தனர்.

இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவு மற்றொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்ட கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நவீன வசதி கொண்ட 5 படுக்கைகள், 24 மணி நேர ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் நோயாளிகள் பயன்படுத்த 2 கழிப்பிடங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்