சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.10 லட்சம் பரிசு வழங்க கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள், நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக பாராட்டு சான்றிதழுடன் ரூ.10 லட்சம் பரிசு வழங்க கவர்னர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
இந்த விருது முதன்முறையாக தற்போது தான் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் கவர்னரின் துணைச் செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செயலகம், கவர்னர் மாளிகை, கிண்டி, சென்னை-600002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம்(அக்டோபர்) 30-ந் தேதி ஆகும். awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களையும் அனுப்பலாம். தகுதியான நபர்களை கலெக்டர், அரசு செயலாளர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பத்மஸ்ரீ விருது பெற்றவர்களும் பரிந்துரைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.