தேசிய கல்வி உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு: மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

தேசிய கல்வி உதவித்தொகைக்கான தகுதித்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

Update: 2022-06-28 19:23 GMT

மத்திய அரசின் சார்பில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மேல்நிலை வகுப்பு வரை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகைக்கான தகுதித்தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-2 வகுப்பு வரை ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் தலா ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் இந்தத்தொகை செலுத்தப்படுகிறது.

இதன்படி நடந்த தேசிய தகுதித்தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 5,900 பேர் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 527 பேர் நடப்பு ஆண்டில் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 393 பேர் தேர்ச்சி பெற்று 2-வது இடமும், மதுரை மாவட்டத்தில் 391 பேர் தேர்ச்சி பெற்று 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

2021-22-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-வது இடமும் பெற்றுள்ள பெரம்பலூர் மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தேசிய கல்வி உதவித்தொகைக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவிகளுக்கும், அவர்களுக்கு ஓய்வு நேரங்களிலும், வாரவிடுமுறை நாட்களிலும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்