வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் வாழை மரங்களை சேதமாக்கி விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-17 18:48 GMT

ராஜபாளையம்,

தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் வாழை மரங்களை சேதமாக்கி விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழை மரங்கள்

ராஜபாளையத்தை சேர்ந்தவர் முத்துபாலா. இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் பீட் அடிவாரத்தில் கல்லாத்து காடு அருகே 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 3 ஏக்கரில் 3 ஆயிரம் வாழை மரங்களை வளர்த்து வருகிறார்.

தற்போது மரங்கள் அனைத்தும் குலை தள்ளி உள்ளது. மீதமுள்ள 3 ஏக்கரில் பலா மற்றும் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக இவரது தோப்புக்குள் புகுந்து விடுகிறது. தோப்புக்குள் வந்த காட்டு யானைகள் ஒரு ஏக்கர் பரப்பளவில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

மேலும் பலா மரங்களில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பலா பழங்களை பறித்து தின்ற யானைகள், 10-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டும் வன விலங்குகளால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, தோப்பை சுற்றிலும் நிறைய பணம் செலவளித்து கம்பி வேலி போட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த ஆண்டு கம்பி வேலியையும் உடைத்து விட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி முத்து பாலா தெரிவித்தார்.

நடவடிக்கை

வன விலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுத்து நிறுத்தக்கோரி பல முறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

யானைகளிடம் இருந்து தங்களையும், தங்கள் பயிர்களையும் பாதுகாத்து கொள்ள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்