3 யானைகள் தொடர்ந்து அட்டகாசம்
கிருஷ்ணகிரி அருகே 3 யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் நிலையில், யானை தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார். 3 யானைகள்
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அருகே 3 யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் நிலையில், யானை தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.
3 யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. மேலும் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
வனத்துறையினர் யானையை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அடர்ந்த வனப்பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன. யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொழிலாளி படுகாயம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையனப்பள்ளி அடுத்த ஜாகிர்மோட்டூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. மேலும் அங்கிருந்த நெல் பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தன. யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ரவி (வயது43) என்பவர் மது போதையில் யானையின் அருகில் சென்றார். அப்போது யானை ஒன்று துதிக்கையால் அவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் பீதி
இதனிடையே நேற்று காலை 10 மணிக்கு மேல் வெயில் அடித்ததால், இந்த 3 யானைகளும் கூசுமலை அருகில் மாந்தோப்பில் முகாமிட்டன. இதனால் வனத்துறையினர் யானைகளை விரட்ட முடியவில்லை. கிருஷ்ணகிரி வன அலுவலர் மகேந்திரன், ராயக்கோட்டை வன அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாந்தோப்பில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.