தேன்கனிக்கோட்டை அருகேவிவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்

Update: 2023-08-29 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. இவற்றை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.

யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள தாவரைக்கரை, கண்டகானப்பள்ளி, கெண்டகானப்பள்ளி, கேரட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.

இந்தநிலையில் தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடித்து ஜவளகிரி வனப்பகுதிக்கு யானைகளை விரட்டினர்.

பயிர்களுக்கு இழப்பீடு

இந்த யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். நொகனூர் வனப்பகுதியில் 3 யானைகள் தனித்தனியாக சுற்றித்திரிவதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். மேலும் வயலுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

நொகனூர் வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்