பாலக்கோடு அருகே கிராமப்பகுதியில்5 காட்டு யானைகள் முகாம்; பொதுமக்கள் அச்சம்

Update: 2023-02-16 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கிராமப்பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களாக தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வருகின்றன. இந்த யானைகள் கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் சேதப்படுத்தி விடுகின்றன.

இந்த நிலையில் பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரம், மேல் சவுளுப்பட்டி கிராமங்களுக்கு நேற்று 5 காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, தக்காளி, நெல் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர் செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பொதுமக்கள் அச்சம்

இதற்கிடையே வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு காட்டுக்கு விரட்டினாலும் யானைகள் தண்ணீர், உணவு தேடி மீண்டும் கிராமங்களுக்கு வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. தற்போது அமானி மல்லாபுரம், மேல் சவுளுப்பட்டியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்