மின்வேலியில் சிக்கி யானை சாவு: வனச்சரகர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்

மின்வேலியில் சிக்கி யானை இறந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் வனச்சரகர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-07-29 23:15 GMT

மேட்டூர்:

மின்வேலி

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கூல்கரடுபட்டி கிராமம். தமிழக- கர்நாடக எல்லை வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் வாழை, பருத்தி போன்ற பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த 24-ந்தேதி அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டு யானை அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக இறந்தது.

இது குறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதமன், மேட்டூர் வனச்சரக அலுவலர் அறிவழகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொளத்தூர் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த புஷ்பநாதன் என்பவரது தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இருந்ததும், அந்த பகுதியில் சென்ற போது மின்சாரம் தாக்கி யானை இறந்ததும் தெரியவந்தது.

4 பேர் பணி இடைநீக்கம்

இதையடுத்து புஷ்பநாதனை கைது செய்து விசாரணை நடத்தினர். மின்சார துறை சார்பில் புஷ்பநாதனுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் வனச்சரகர் அறிவழகன், வனவர் ரகுநாதன், வன காப்பாளர் பத்ரன், வனக்காவலர் சக்திவேல் ஆகியோர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக மேற்கொள்ளவில்லை என்று கூறி அவர்கள் 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து சேலம் மண்டல வனபாதுகாவலர் பெரியசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்