தளி பெரிய ஏரியில் 2 யானைகள் முகாம்

தளி பெரிய ஏரியில் 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2023-05-20 06:45 GMT

தளி பெரிய ஏரியில் 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அவற்றை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

யானைகள் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஜவளகிரி ஆகிய வனப்பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து 2 யானைகள் பிரிந்தன. இந்த யானைகள் நேற்று தளி பெரிய ஏரிக்கு சென்று தண்ணீரில் நீந்தியும் குளித்தும் கும்மாளமிட்டன. ஏரியில் 2 யானைகள் முகாமிட்டு இருக்கும் தகவல் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் யானைகளை பார்க்க அப்பகுதியில் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ஏரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் யானைகளின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

விரட்ட நடவடிக்கை

இதுதவிர மின்சார வாரிய துறை ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு யானைகள் செல்லும் வழித்தடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பை துண்டித்து யானைகள செல்ல வழிவகை செய்து வருகின்றனர். மேலும் யானைகள் ஏரியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாதவாறு வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தளி பெரிய ஏரியில் 2 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்