தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்; 30 தென்னங்கன்றுகள்-100 வாழைகள் நாசம்

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் 30 தென்னங்கன்றுகளையும், 100 வாழைகளையும் மிதித்து நாசம் செய்தன.

Update: 2023-03-14 20:54 GMT

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் 30 தென்னங்கன்றுகளையும், 100 வாழைகளையும் மிதித்து நாசம் செய்தன.

யானைகள் படையெடுப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஜீர்கள்ளி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அடிக்கடி பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் காளசாமி (வயது 45). இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் தோட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட யானைகள் காளசாமியின் தோட்டத்துக்குள் புகுந்து தென்னங்குருத்துகளை தின்றும், மரத்தை மிதித்தும் நாசம் செய்தன. இதனால் சுமார் 30 தென்னங்கன்றுகள் சேதமடைந்தன.

100 வாழைகள் நாசம்

சத்தம் கேட்டு தோட்டத்துக்கு ஓடிவந்த காளசாமி யானைகள் நிற்பதை பார்த்து அக்கம் பக்கத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்டினார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வெளியேறின.

போகும் வழியில் கரளவாடி கிராமத்துக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள குமார் என்பவரின் வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்து சுமார் 100 வாழை மரங்களை மிதித்து துவம்சம் செய்தன.

அந்த பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி யானைகளை காட்டுக்குள் விரட்டினார்கள்.

யானைகள் நாசப்படுத்திய தென்னங்கன்றுகள் மற்றும் வாழைகளுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்