பென்னாகரம் அருகேவிவசாய நிலங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்

Update: 2022-12-24 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

2 யானைகள்

கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் இருந்து வழிதவறிய மக்னா மற்றும் ஆண் யானை என 2 காட்டு யானைகள் தர்மபுரி மாவட்டம் சஞ்சீவராயன் மலை வழியாக வந்து பிக்கிலி வனப்பகுதியில் பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி தொட்டிபள்ளம் கிராம பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் தொட்டிபள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொட்டிபள்ளம் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு மற்றும் தகர பெட்டிகளை கொண்டு சத்தம் எழுப்பி யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 2 யானைகளும் பகல் நேரங்களில் வனப்பகுதியிலும், இரவு நேரங்களில் மீண்டும் கிராம பகுதிகளில் நுழைகிறது.

தொடர் கண்காணிப்பு

இந்த நிலையில் இரவு நேரங்களில் கிராம பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பாலக்கோடு வனத்துறை அலுவலர் நடராஜன் தலைமையில் வனவர்கள் முனுசாமி, கனகராஜ் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே யானைகளை விரட்டும் பணியை உதவி வன பாதுகாப்பு அலுவலர் வின்சன் பார்வையிட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 2 யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யானைகளை மொரப்பூர் பீட் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் யானைகளால் சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்த கணக்கீடுகளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்