நாடக மேடையில் கல்வி கற்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள்

கறம்பக்குடி அருகே பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெட்ட வெளியிலும் நாடக மேடையிலும் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர். எனவே விரைவில் புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-01-25 19:16 GMT

தொடக்கப்பள்ளி கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முதலிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த முத்தானப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொடக்கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. உயிர் சேதம் மற்றும் காயம் ஏதுமின்றி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இடித்து அகற்றப்பட்டது

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முத்தானப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தனர். இதில் பள்ளி கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்தது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவுபடி ஆபத்தான அந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு மாற்றாக பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை. கட்டிடம் கட்டுவதற்கான எந்த பணியும் தொடங்கப்படவில்லை.

கோரிக்கை

இதனால் இந்த பள்ளி மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் அப்பகுதியில் குளத்தின் கரையில் உள்ள கோவில் முன்பு வெட்ட வெளியிலும், கோவில் நாடக மேடையிலும் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து முத்தானப்பட்டியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பெற்றோர்கள் பதட்டம்

முத்தானப்பட்டி இந்திரா:- கடந்த ஒரு வருடமாக பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழை பெய்தால் பள்ளி செயல்பட முடியாத நிலை உள்ளது. மாணவர்களை மிகுந்த அச்சத்துடனே பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்.

வெட்ட வெளியிலும், விழா மேடையிலும் அமர்ந்து இருப்பதால் வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். அருகில் குளம் இருப்பதால் எந்த நேரத்தில் என்ன அசம்பாவிதம் நடக்குமோ என பதட்டதுடனே பெற்றோர்கள் உள்ளோம். எனவே பள்ளி கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கி விரைவாக கட்டவேண்டும்.

புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

கற்பகம்:- ஆபத்தான நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் படிப்பை முறையாக தொடர முடியாத நிலை உள்ளது. பாதுகாப்பாற்ற நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகின்றனர்.

கட்டிடம் இல்லாததால் பள்ளியில் பதிவேடுகளை வைத்து பராமரிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மாணவர்கள் சத்துணவை வெட்ட வெளியில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். எனவே முத்தானப்பட்டி அரசு பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் மாணவர்களின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

அடிப்படை வசதிகள் ேதவை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் சரவணன்:- மாணவர்களின் நலன் கருதி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பள்ளி கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் பல பள்ளிகளில் மாணவர்கள் உரிய வகுப்பறை கட்டிடம் இன்றி படிக்க வேண்டிய நிலை உள்ளது. கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்காக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. பல பள்ளிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் உள்ளன. எனவே பள்ளிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்