மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு

நாகர்கோவிலில் ரூ.2.93 கோடியில் கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்.

Update: 2023-06-30 18:45 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ரூ.2.93 கோடியில் கட்டப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்.

ரூ.2.93 கோடியில்...

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.2.93 கோடி செலவில் மின்னணு வாக்குப்பதிவு கிடங்கு கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் புதிய வாக்குப்பதிவு எந்திர கிடங்கு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், ' இந்த கட்டிடமானது 3 தளங்களை உடையது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் போலீசார் அறை, முதல் நிலை சோதனை அறை, இரண்டாம் நிலை சோதனை அறை, அலுவலக அறை, பயிற்சி கூடம், சேமிப்பு கிடங்கு, கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முதல் மற்றும் 2-வது தளம்

முதல் தளம் மற்றும் 2-ம் தளத்தில் சேமிப்பு கிடங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கு ஸ்டீல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வெள்ளைசாமி ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி, தேர்தல் தாசில்தார் சுசீலா, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியம், தாசில்தார்கள் ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினைதீர்த்தான் (தோவாளை), குமாரவேல் (விளவங்கோடு), தாஸ் (கிள்ளியூர்), துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய கிடங்குக்கு எந்திரங்கள் மாற்றம்

நாகர்கோவிலில் புதிய கிடங்கு திறக்கப்பட்டதையொட்டி பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் புதிய கிடங்குக்கு மாற்றப்பட்டன. இதற்காக 3,799 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2262 கட்டுப்பாட்டு கருவி, 2185 வி.வி.பேட் போன்றவை நேற்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு நாகர்கோவிலில் உள்ள கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன. இதைெயாட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்