மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார். நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மின் கம்பியில் பழுது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குப்பக்குடி சுடரொளி நகரை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் சரத்குமார் (வயது 27). டிப்ளமோ படித்துள்ளார். இவர், ஆலங்குடி வடக்கு மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஆலங்குடி அருகே கீழாத்தூர் ஜீவா நகரில் உயர் மின்னழுத்த கம்பியில் பழுது பார்க்கும் பணியில் சக ஊழியர்களுடன் சரத்குமார் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமார் மீது மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். இதையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிேசாதனை செய்வதற்காக ஆலங்குடி அரசு மருத்துவமனை பிரேத பரிேசாதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சரத்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சரத்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சாலை மறியல்
இதையடுத்து சரத்குமாரின் உயிரிழப்புக்கு மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே காரணம். உயிரிழந்த மின்வாரிய ஊழியருக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி சரத்குமாரின் உறவினர்கள் மற்றும் அவரது கிராமமக்கள் ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் வடகாடு முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் தொடர்ந்தனர். மறியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
ரூ.2 லட்சம் நிவாரணம்
இதையடுத்து அங்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உஷா நந்தினி, வருவாய்த்துறை துணை தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் அலுவலர் துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், மின்வாரிய அதிகாரி பிருந்தாவனம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து சமரசபேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சத்தை சரத்குமாரின் தாய் இந்திராணிக்கு வழங்கினார்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் அவருக்கு கருணை அடிப்படையில் மின்சாரத்துறையில் வேலை வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றும், அரசிடம் இருந்து உரிய நிவாரண தொகை பெற்ற தர வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் ஆறுதல் கூறினார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வடகாடு முக்கம் பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.