தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு விரைவில் அறிவிப்பு..?
தமிழகத்தில்மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
சென்னை,
தமிழக மின்சார வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜூலை 18-ந்தேதி சமர்ப்பித்து இருந்தது. இந்த மனுக்கள் தொடர்பாக ஆணையம் பொதுமக்களிடம் கடந்த மாதம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது.
கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி கோவையிலும், 18-ந்தேதி மதுரையிலும், 22-ந்தேதி சென்னையிலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் மின் கட்டணங்களை உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு பொதுமக்களிடம் கட்டணத்தை உயர்த்தி கேட்பதா? என்று கேள்வி எழுப்பினர்.
சென்னையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம் அதை நிர்வகிப்பவர்கள்தான். இதற்கு பொதுமக்களிடம் அதிக கட்டணம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். சாதாரண பொதுமக்கள் மின் கட்டணத்தை தவறாமல் செலுத்தி வரும் நிலையில் மின்வாரிய நஷ்டத்திற்கு பொதுமக்களை எப்படி பலிகடா ஆக்க முடியும்? என்றனர்.
மின்வாரியம் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை ஏற்பட்டதற்கு யார் காரணம்? அவர்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். அல்லது சரிவர நிர்வாகம் செய்யாத மின்வாரிய சேர்மன் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்கள். இதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்து விட்டு சென்றுவிட்டனர். பொதுமக்கள் சொன்ன கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த விபரங்கள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்காதது தொடர்பாக சில தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஆணையத்தில் சட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதித்தது. இதனால் திட்டமிட்டபடி இந்த மாதம் 1-ந்தேதி முதல் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டது.
நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மின்கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்க விதித்த தடையை விலக்கிக்கொண்டது.
இந்த நிலையில் மின்சார கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நேற்று விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த நிலையில் விரைவில் மின் கட்டணங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.