வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2023-06-12 19:36 GMT

ராஜபாளையம், 

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி, தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையத்தில் மாநாடு

மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு ஜூலை 28 முதல் 30-ந்தேதி வரை ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.

வருகிற 23-ந் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை அனைத்து கட்சிகளும் திறம்பட எதிர்கொள்ளும். பா.ஜ.க.வை வீழ்த்தும். புதிய ஆட்சியை மத்தியில் அமைக்கும்.

மின்கட்டணம் உயர்வு

அமித்ஷா வந்திருந்த போது சில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது. இதை அரசியல் ஆக்க வேண்டாம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா பேசும்போது நான் எந்த இருட்டையும் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக அரசியல் ஆக்குகிறார்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது இல்லை. மின் கட்டணம் உயர்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. பல்வேறு கட்சிகள் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கோரிக்கையை அரசு ஏற்று வீடுகள், குடிசைத்தொழில், கைத்தறி மற்றவைகளுக்கு உள்ள சலுகை தொடரும். மின் கட்டணம் உயர்த்தப்படாது எனவும் வணிக நிறுவனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்