வெற்றி வாழ்க்கை கிராமத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

வெற்றி வாழ்க்கை கிராமத்தில் சாலையில் மின்கம்பங்கள், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-21 18:45 GMT

சிக்கல்:

வெற்றி வாழ்க்கை கிராமத்தில் சாலையில் மின்கம்பங்கள், மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்கம்பங்கள்...

கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சியில் வெற்றி வாழ்க்கை கிராமம் உள்ளது. இங்கு மேலத்தெரு, கீழ்த்தெருவில் சுமார் 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோகூர்- ஆழியூர் சாலையில் வெற்றி வாழ்க்கை கிராமம் அமைந்துள்ளதால், கோகூர், கீழ்வேளூர், ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

வெற்றி வாழ்க்கை கிராமத்தில் மேலத்தெருவில் இருந்து கீழ்த்தெரு இடையே 1 கிலோமீட்டர் தூரம் சாலையில் மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

இரவு நேரங்களில்

இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் வாய்க்கால் மற்றும் வயல்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் வருவதால் தினமும் அச்சத்துடனேயே அப்பகுதியை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், மின் கம்பங்கள் அமைத்து அதில் மின் விளக்குகள் பொருத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்